Monday, January 23, 2006

அஹோபிலம் போனோம் – மஹோன்னதம் அடைந்தோம்!

மு.கு: தவறு இருந்தால், சுட்டிக் காட்டும் படி, தேவரீரைக் கேட்டுக் கொள்கிறேன்.

டிசம்பர் 24-26, அடியேனுக்கு ஒரு மகத்தான அனுக்கிரஹம் கிடைத்தது: மனைவி மற்றும் இரண்டாவது புத்திரனுடன் நம் பகவானுடைய அருமையான ஆனால், ‘சென்று கண்டற்கரிய க்ஷேத்திரத்தி’ற்குச் சென்று, பகவானுடைய அளப்பற்கரிய அருளைப் பெறும் பாக்கியம் கிடைத்தது. ஆனால், பிரஹலாதனுக்காக, தூணில் கூட, தன் பிறப்பை எடுத்த பிரதம நாயகன், எங்களுக்காக, கருணை காட்டி, தன் அழகு தரிசனம் காட்டியதில் வியப்பொன்றும் இல்லைதான்.

26 டிசம்பர் எங்காவது புதியதாகச் செல்லலாம் என்று யோசித்தோம். அன்று அடியேன் மனைவியின் (தமிழ்) பிறந்த நாள். திடும்மென, என்னுடைய திட்டம் ஏதும் இன்றி, அஹோபிலம் என்ற வார்த்தை என் வாயில் இருந்து புறப்பட்டது. ஆஹா, அந்த வார்த்தையே, என் வாய்க்கும், என் மனைவியின் செவிகளுக்கும் புண்ணியம் சேர்க்க ஆரம்பித்து விட்டது. அவள் நக்ஷத்திரம் ‘ஸ்வாதி’ என்பதும், அது நம் அழகிய சிங்கனுக்கு உகந்ததாயிற்றே என்பதும் உணர்வில் வந்த போது, இருவர் மனங்களும் புளகாங்கிதம் அடைந்து விட்டன. பக்தன் கேட்கவே வேண்டாம் – பகவான் கூப்பிட்டுக் கொடுப்பான் என்பது உண்மை என்று புரிந்து போனது.

24ந் தேதி காலை கிளம்பும் போது, ஒரு சின்ன தடை: சொல்லி வைதத ‘அம்பாஸடர்’ டாக்சி தயாராக இல்லை என்று, ‘டிராவல்’ஸில் இருந்து போஃன். இண்டிகா அனுப்பினார்கள். அது அவ்வளவு ஸௌகரியம் இல்லை என்று, எங்கள் அபிப்ராயம். திருப்பி அனுப்பி விட்டோம். மனம் கலங்கத் தொடங்கியது. வரிசையாக, ஒவ்வொரு டிராவல்ஸாக, போஃன் செய்யத் தொடங்கினோம். எல்லாரும், ஆந்திரா போக, இண்டிகாதான் இருக்கிறது என்றார்கள். ஆந்திர மாநிலத்திற்கு, ‘டாக்ஸ்’ அதிகம் என்பதால், ‘நிறையப் பேர் சாதரணமாக விரும்பும்’ காருக்குத்தான் ‘டாக்ஸ்’ கட்டி வைப்பது, அவர்களுக்கு உகந்ததாக இருந்தது.

பகவான் அப்படி கை விடுபவனாகத் தெரியவில்லை. ‘ராகவேந்திரா டிராவல்ஸ்’ கை கொடுத்தது. 6 மணிக்குக் கிளம்புவதாக, திட்டம். ஒன்றும் மோசமாகவில்லை – எட்டு மணிக்குக் கிளம்பி விட்டோம், டிரைவர் பிரகாஷ் சாரத்யம் செய்ய. கண்டிப்பாக, நரசிம்மன் ஏதாவது காரணம் வைத்திருப்பான்.

ஒரு வேளை, சில பேருக்கு உதவியாக இருக்கும் என்று, நாங்கள் போன வழி இதோ சொல்கிறேன்:
பெங்களூர் மல்லேஸ்வரத்தில் கிளம்பும் போது காலை 8 மணி. ‘யெலஹங்கா’ வழியாக, அனந்த்பூர்’ சாலையில் பயணம். 58 கி.மீ, ‘சிக்கபலபூ’ரில், காலை உணவு, 9.40 மணி அளவில். அங்கே, ஒரு ‘சாந்தி சாஹர்’ இருக்கிறது. 10 மணிக்குக் கிளம்பினோம். 11.20மணிக்கு, ‘பெனுகொண்டா’வில் (145 கி.மீ, பெங்களூரில் இருந்து) ‘செக் போஸ்ட்’. இருபது நிமிட வேலை. கிளம்பினால், உடனே, ரயில்வே லைன் வருகிறது. 12.10 மணி, 171 கி.மீ அளவில், ‘அனந்த்பூர்’ போவதற்கு முன்பாகவே, தர்மாவரம் சாலையில் (வலது பக்க சாலை) திரும்பினோம். 12.29 மணி, 186 கி.மீல் தர்மாவரம் வந்தது. இதன் பிறகு, சாலை அகலக் குறைவானதாகிறது. மதியம் 2 மணி முதல், ‘தாடி பத்ரி’ யில் ‘டேரா’. சாப்பிட எல்லாம், பெரியதாகக் கிடைக்கும், என்று, ஏமாற வேண்டாம். இங்கே, ஒரு பெரிய கோவில் (‘வெங்கட் ரமணா’) தெரிந்தது. ஆனால், கோவில் மூடியிருந்ததால், தரிசிக்க பிராப்தம் கிடைக்கவில்லை. 3 மணிக்குக் கிளம்பி, ஜம்மலமடகு நோக்கிப் போனோம். போர்டு எல்லாம் கிடையாது. விசாரிக்க வேண்டியது தான். 3.30 மணியளவில் (290 கி.மீ), வலது பக்க சாலையில் திரும்பிப் போக வேண்டும். ஜம்மலமடகு போவதற்கு முன்பாகவே, அல்லகட்டா நோக்கி, வலது பக்கம் (கிட்டத்தட்ட ‘U’ திருப்பம் மாதிரி) திரும்பியிருக்க வேண்டும். ஆனால், நாங்கள், ஜம்மலமடகு போய் (4.15 மணி, 333 கி.மீ), 5 கி.மீ. திரும்பி வந்தோம். அல்லகட்டா நோக்கிப் போகும் போது, 372 கி.மீ (பெங்களூரில் இருந்து), 5.15 மணிக்கு, தேசிய நெடுஞ்சாலையில் (கர்னூல் – கடப்பா) சேர்கிறது. அல்லகட்டா தாண்டி வந்து, 5.50 மணிக்கு (400 கி.மீ) கீழ் அஹோபிலம், மாலோலன் ‘கெஸ்ட் ஹவுஸ்’ வந்து சேர்ந்தோம்.

இங்கே மேனேஜராக இருப்பவர் ஸ்ரீமான் பத்ரி. முன்னதாகவே, ரிசர்வ் செய்து வைத்திருந்தோம். ஸ்ரீமான் பத்ரி அருமையாகப் பார்த்துக் கொண்டார் – உணவு, உறையுள், உடன் வர ‘கைடு’, உடல் நோகப் (ஆனால் கால்கள் நோகாமல்) பயணம் செய்ய வாகனம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். செலவு விவரம்: உணவு - சாதாரணமாக இலவசம் தான் – ஆனால் கிளம்பும் போது நன்கொடை கொஞ்சம் கொடுப்பது – ரசீது கிடைக்கும் - ஒரு உத்தமமான செயல்; (இரண்டு படுக்கை கொண்ட) அறை வாடகை - ரூ 200 ஒரு நாளைக்கு; ‘கைடு’ -ஒன்பது கோவிலுக்கும் சேர்த்து, ரூ 300 + ஏதாவது ‘டிப்ஸ்’; பாவன நரசிம்மரைச் சேவிக்கப் போக, ஜீப் வாடகை: ரூ 1,400. பார்கவ நரசிம்மரைச் சேவிக்கப் போக ஆட்டோ ரூ 70 முதல் ரூ100 வரை. யோக மற்றும் சத்ரவத நரசிம்மரைச் சேவிக்கக் காரில் போன படியால், எவ்வளவு என்று தெரியவில்லை – ரூ 100 இருக்கலாம், இரண்டுக்கும் சேர்த்து. கீழ் அஹோபிலத்தில் இருந்து, மேல் அஹோபிலமும் காரில் போன படியால், செலவு தெரியவில்லை.

ரவு பிரஹலாத வரதன் கோவிலுக்குப் போய், பெருமாளின் கம்பீர உருவத்தைக் கண்டு, இங்கு வரத் தீர்மானம் செய்ததற்காக, எங்களுக்குள்ளாக சந்தோஷிதுக் கொண்டோம். ஏதோ நாங்கள், திட்டம் போட்டு வந்ததாக எண்ணியதைக் கண்டு, அவன் சிரித்துக் கொண்டிருப்பதை நாங்கள் கவனிக்கத் தவறி விட்டோம்.

சாயங்காலம், சென்னை தம்பதி ஒன்றுடன் பேசிக் கொண்டிருந்தோம். அவர்கள் அன்று காலை தான் 5 நரசிம்மர்களையும், மதியம் 3 நரசிம்மர்களையும் சேவித்தார்களாம். காலைப் பயணம் காலை ரொம்பப் படுத்தியதாகச் சொல்லக் கேட்டு, மனசு விசனமாகி விட்டது. பத்து வயதுப் பையனால், பாவம், சமாளிக்க முடியுமா என்று வேறு பயம் வந்தது. மறுபடியும், சிங்கனின் சிங்காரச் சிரிப்பைக் கவனிக்கத் தவறி விட்டோம்.

று நாள் காலை, 7 மணிக்கு, பக்கத்தில் இருந்த ஹோட்டலில் இட்லி சாப்பிட்டு விட்டு (மடத்தில், நேரமாகும் என்பதால்), கைடு சுப்பையாவுடன் கிளம்பினோம். சுப்பையா ஒரு அருமையான மனிதர். பொறுமைசாலி. எங்கள் கையோடு கொண்டு போன பையைத் (தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட், கேமரா இத்யாதி) தானே தூக்கிக் கொண்டார். விஷயங்கள் எல்லாம் விளக்கினார். இந்தக் கட்டுரையில் உள்ள விஷயங்கள் அவர் சொன்னவை தான்.

கீழ் அஹோபிலத்தில் இருந்து காரில் கிளம்பி (8 கி.மீ) நேராக மேல் அஹோபிலம் சென்றோம். (கீழ் அஹோபிலம் நவ நரசிம்மர்களில் ஒன்றல்ல; ஆனால், மேல் அ. ஒன்று.) (போகும் வழியில் தான் கரஞ்ச நரசிம்மர் வருகிறார்; பாவன நரசிம்மரைச் சேவிக்கப்  போகும் ஜீப் சாலை வருகின்றன. அவை எல்லாம் அப்புறம்). மேல் அஹோபிலம் நரசிம்மரைச் சேவிக்க  (ஒரிஜினல் நரசிம்மர்; சமத்தாக, கம்பீரமாக, குகைக்குள் உட்கார்ந்து அருள் பாலிக்கிறார்), கொஞ்சம் படிகள் (50-60) ஏறி, சின்னதாகக் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். நரசிம்மனைச் சேவிப்பதற்கு  முன்னால், ஒரு சிவ லிங்கம் இருக்கிறது. அதைத்தான் முதலில் சேவிக்க  வேண்டுமாம். இங்கே, ஆதி சங்கரர் நிறுவிய சுதர்ஸன சக்ரம் இருக்கிறது; நரசிம்மனைச் சேவித்து  விட்டு, இதையும், தாயார் சன்னதியும் சேவிக்கலாம்.  நரசிம்மர் சன்னதிக்கு அருகில், ஒரு குகை மூடி இருக்கிறது. அதற்குள், முன்பிருந்த ஜீயர் ஒருவர், முஸ்லிம் ஆக்ரமிப்பைச் சமாளிப்பதற்காக, பூஜை சங்கதிகளுடன் போய் விட்டதாக நம்பிக்கையாம். இப்போதும், சில இரவுகளில், பூஜை சப்தம் கேட்குமாம். (நம்புவதில் ஒன்றும் நஷ்டம் இல்லை என்று நான் நினைக்கிறேன்; நீங்கள்?)

பின்னர் மலையேறும் பணி தொடங்குகிறது. முதலில் கால்களை மூன்றாக்கிக் கொள்ள வேண்டும் – பயப் படாதீர்கள்; வாடகைக்கு, ஒவ்வொருவருக்கும் ஒரு குச்சி வாங்கிக் கொள்ள வேண்டும்.

பவநாசினி நதி, மலையில் இருந்து மெதுவாக ஓடி வந்து, தூய்மையாக, ஒரு குளம் போல, இருக்கிறது. பகவான், அரக்கனை அழித்த பின்னர், கைகளைக் கழுவ, அமராவதி நதி, இப்படி வந்ததாம். கல்களுக்கிடையில், மெதுவாக நடை தொட்ங்குகிறது. அங்கங்கு, சுப்பையாவின் வார்த்தைகள்; அங்கங்கு அவர் ஆணைகள; அங்கங்கு அவர் கைகள் – எல்லாம் பிடித்துக் கொண்டு, நடக்கின்றோம்.

க்ரோட (தந்தம் – கொம்பு) நரசிம்மர் (2வது நரசிம்மர், எங்கள் பயணத்தில்) முதலில் வருகிறார். ஒரு குகைக்குள் இருக்கிறார். ஸ்ரீ தேவியின் ‘ரெகமெண்டேஷ’னின் பெயரில், வராக நரசிம்மர், ராக்ஷஸனின் பிடியில் இருந்து, பூ தேவியை மீட்டு வரும் போது, அந்தத் தாயார், நம் எல்லாரின் தந்தையின், கொம்பைப் பிடித்துக் கொண்டு வந்தாளாம்.

யணம் தொடர்கிறது. மேலே ஏறும் போது, சிங்கனுக்குப் பிறப்புக் கொடுத்த தூண் (உக்ர ஸ்தம்பம்) உயரத்தில் தெரிகிறது. பிளந்த தூண். கண்களை மூடி, அவன் உருவத்தை மனதில் கொண்டு வந்தால், தூண்களுக்கிடையில், உக்ரத்துடன், நரசிம்மன் வருகிறான். தூண் வேறொன்றும் இல்லை: நமது அகங்காரம் தான்; நமது அறியாமை தான்; பக்தனுக்காக எங்கேயும் வந்தான்; எங்கேயிருந்து வேண்டுமானாலும் வந்தான் – நம்மை ஆட்கொள்ள வரமாட்டானா?

மேலே நெருங்கும் போது, மாலோல நரசிம்மரைச் சேவிக்கப்  போக சௌகரியமாக, பாலம் வருகிறது. ஆனால், அதற்கு முன், ஜ்வாலா நரசிம்மரைச் சேவிக்கலாம்.

ஜ்.ந சேவிக்கப் போகையில், சுப்பையா, தூணுக்குப் போகும் மெல்லிய பாதையைக் காட்டுகிறார். கிட்டத் தட்ட, செங்குத்துப் பாதை. போக முயற்சித்திருக்க வேண்டும் – முடியவில்லை. அங்கே சென்று வந்த மகானுபாவர்களை, நினைத்துக் கொண்டு, அதனால் வந்த, புண்ணியத்தை மட்டும் வாங்கிக் கொண்டு, மேலே நடக்கிறோம். தூணிற்குப் போய் விட்டு வரும் வழியில், பிரஹ்லாதன் படித்த பள்ளிக் கூடம் (‘பிரஹ்லாதன் படி’) வருமாம். (கொஞ்சம் அதிர்ஷ்டக் குறைவு எங்களுக்கு! மாலோல நரசிம்மர் சன்னிதியில் இருந்து, நடந்து போகக் கூடிய தூரம் தானாம். கொஞ்சம் கஷ்டம் தான் – ஆனால், தூண் பாதை அளவிற்குக் கிடையாதாம் – மறு நாள், ஒரு வயதான பக்தை, தான் போய், மூன்று மணி நேரத்தில், மாலோலனையும், பிரஹலாத படியையும் சேவித்து வந்ததாகச் சொன்ன போது, எங்கள் விதியை நொந்து கொண்டது உண்மை!).

ஜ்வாலா நரசிம்மரைச்  (நரசிம்மர் எண்: 3) சேவிக்கப் போகையில், சில்லென்று, பாவநாசினியின் நீர்த் திவலைகள், மேனியைச் சிலிர்க்க வைத்து, புனிதமும் அடைய வைக்கின்றன. ரக்த குண்டம் (துரும்பிலும் இருக்கும் ஹரி, தூணில் இருந்து வந்து, உலகின் துயரை முடித்த பிறகு, கை கழுவிக் கொண்டானாம்.) நீரைப் புரோக்ஷித்துக் கொண்டு மேலே போகிறோம். ஜ்வாலா நரசிம்மர் வாசலில், நமது முன்னோர்கள் (சும்மா, குரங்குகள் தாம் – செல்லமாகச் சொன்னேன்) ஏராளமாக உட்கார்நது இருக்கிறார்கள். அர்ச்சகர், அபிஷேகம் செய்து, இனிமையான பானகம் தருகிறார்.

உக்ர ஸ்தம்பத்தில் இருந்து, பகவான், அரக்கனின் குடுமியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வரும் போது, அவன் ஓடாமல் இருக்க, காலால், தட்டுகிறார். இது ஒரு விக்ரஹமாக இருக்கிறது. அரக்கன், அப்போது, ஹரியின் உருவம் காட்டும் படி, கேட்கிறானாம். அழகிய ஹரியாக, ஒரு விக்ரஹம். அரக்கனை மடியில் போட்டுக் கொண்டு, அவனை சம்ஹரித்து, அவன் வயிற்றில் இருந்த வேதங்களை தோளில் போட்டுக் கொண்டு, ஒரு விக்ரஹம். நிலைப் படியில், உட்காரும் போது, அதனை மேடையாக்க, கருடன் அங்கே வந்து அமர்ந்தானாம். அர்ச்சகர், ஒவ்வொன்றாக விளக்கும் போது, நம்க்கு, ஹரியைச் சரணடைய வேண்டும் என்று தெளிவாக விளங்கிப் போகிறது.

டுத்த இலக்கு, மாலோல நரசிம்மன் (எண்: 4). வேதங்களைத் தொலைத்து விட்டு, பிரமன் திகைத்து நின்றானாம். பகவானைப் போய் வேண்ட, பயம். குழந்தைகளுக்கு உடனே தோன்றுவது அம்மா ஞாபகம் தானே. அதைத்தான் பிரமனும் செய்தான். தாயார்தான், நமக்கு முதல், ஆச்சாரியார் வேறு. கனிவைத் தவிர, அவளுக்கு என்ன தெரியும். உடனே ரெகமண்ட் செய்து விட்டாள். பகவான் மறுப்பானா? வேதங்களை மீட்டு விட்டு, பிரமனிடம் கேட்டான்: “ஏண்டா, குழந்தை, நீ நேராக, என்னிடமே வந்திருக்கலாமே! அம்மாவை எதுக்கு தொந்தரவு பண்ணணும்?” அப்போது தான் பிரமன் பகவானை, ‘மா லோலன்’ என்றானாம். அதாவது, அம்மாவை மிகவும் விரும்புபவனாம். அதனால் தான், எதற்கும் இருக்கட்டும் என்று, அம்மா மூலம் போனானாம்! நமக்கும் தெரிந்த, ரகசியம் தானே இது. அதனால் தானே, கோவிலுக்குப் போனால் கூட, முதலில் தாயாரைச் சேவித்து விடுகிறோம்.

மாலோலனச் சேவித்து விட்டு, விடு விடு என்று கீழறிங்கி வந்து, மேல் அஹோபிலத்தில் இருந்து கிளம்பி விட்டோம். மணி, இன்னும் 12 கூட ஆகவில்லை. காரில் கிளம்பி, மடத்துக்கு வரும் வழியில், கரஞ்ச நரசிம்மர் (எண்: 5). அட, இது என்ன, நரசிம்மரா, ராமரா? ஒரு கையில், வில்லுடன்? சுப்பையா விளக்குகிறார்: கரஞ்ச (கருங்காலி?) மரத்தின் கீழ் ஹனுமான் ராமரை எண்ணித் தவம் செய்தாராம். வந்தது என்னவோ, நம் நரசிம்மர். ஹனுமான் ஒத்துக் கொள்ள மறுத்து விட்டார். குழந்தை, பிடிவாதம் பிடித்தால், நாம் விட்டு விடுவோமா? சமாதானப் படுத்த, ‘ராமனும் நானே! சிங்கனும் நானே’ என்று காட்சி கொடுத்தாராம். அது மட்டும் இல்லை – அப்படியே, அனுமனை அணைத்துக் கொண்டாராம். ஆஹா, அங்கிருக்கும் அனுமன் சன்னிதியைப் பாருங்கள்: அவன் தோள்களிலும் சங்கு சக்கரம் தட்ங்கள் – ஆனால், வலம் இடம் மாறி.

ழக்கமாக, மதியம் ஓய்வெடுத்துக் கொண்டு விட்டு, சாயங்காலத்துடன், மேலும் மூன்று நரசிம்மர்களைச் சேவிப்பார்களாம்.  மறு நாள், பாவன நரசிம்மர். ஆனால், சுப்பையா, எங்களிடம், இன்றே, பாவன நரசிம்மரையும் சேவிக்கத் தயாரா என்று கேட்டார். அமுதத்தை யாராவது, ஒத்திப் போடுவார்களா? உடனே சரி என்றோம். ஆனால், ஜீப் கிடைக்க வேண்டுமே!

கிடைத்தது, ஸ்ரீமான் பத்ரி தயவில். மடத்தில், அருமையான அமுது செய்து விட்டு, விட்டோம் சவாரி. என்ன வென்று, சொல்வது அந்தப் பயணத்தை! காட்டுக்கு நடுவில், கல்களுக்கு இடையில், வாழ்க்கையை ஞாபகப் படுத்துவது போல், இருந்த மேட்டுக்கும், பள்ளத்துக்கும் நடுவில் – அந்த ஜீப் ‘ஸ்திதப் பிரக்ஞ’னாக சென்று கொண்டிருந்தது! (யாரோ தங்கும் இடத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்கள்: “ஆமாம், ஜீப்பின் ஒரு சக்கரம், தரையைத் தொடாமல், அந்தரத்திலேயே தொங்கிக் கொண்டிருக்குமாமே, அப்படியா?”) ஜீப் போகும் பாதை சுமார், 20 கி.மீ. மற்றொரு வழி இருக்கிறது: மேல் அஹோபிலத்தில் இருந்து, கிட்டத்தட்ட, 300 படிகளில் ஏறி, அதன் பிறகு சுமார், 4 கி.மீ நடக்க வேண்டும்.

ஜீப் பாதையில், ஒரு ஆஸ்ரமம் வருகிறது. விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை.

பாவன நரசிம்மர் (எண்: 6), வேட்டுவ குலத்தில் செஞ்சி லக்ஷ்மியாகப் பிறந்த தாயாரை மணக்க வந்த மாப்பிள்ளையாம். இவருடைய மீசை கூட, கம்பீரமானது. வேட்டுவ குல ராஜா தயங்கினாராம்: ‘நாங்கள் எல்லாம், மாமிசம் சாப்பிடுவோமே...’. பகவான், அவர்களுக்காக, ஒரு ‘ஸ்பெஷல்’ சலுகை கொடுத்தாராம். அதனால் தான், இன்றும் கூட, கோவிலுக்கு வெளியே உள்ள கூடாரத்தில், அவ்வப்போது, ஆடு மற்றும் கோழிகள் பலி கொடுப்பது உண்டாம். ஆனால், பகவானுக்கு சமர்ப்பிப்பது கிடையாதாம்.

றுபடியும், அறைக்கு வந்து (சுமார் 4.30 மணி), கொஞ்ச நேரத்தில், ஒரு ஆட்டோ பிடித்து, (காரில் போவது கடினம்) பார்கவ நரசிம்மரைச்  (எண்: 7) சேவிக்கக்   கிளம்பினோம். சுமார் 3.5 கி.மீ தூரம். பரசுராமருக்குக் காட்சி தந்த நரசிம்மர். 50-60 படிகள் ஏற வேண்டும்.

அதன் பின்னர், எங்கள் வாடகைக் காரிலேயே, சத்ரவத (எண்: 8), யோகானந்த (எண்:9) நரசிம்மர்களைத் தேடிக்  கிளம்பினோம். (5.30 மணி). சத்ரவத நரசிம்மர், மஜா ஆசாமி. சிங்கம் சிரித்துப் பார்க்க வேண்டுமா? சத்ரவதரைப் பாருங்கள். அத்துடன், தொடையில் தாளம் வேறு. உண்மையாகவே, மனசுக்கு சந்தோஷத்தை அள்ளித் தரும் பகவான். ஆஹா, ஊஹூ என்ற கந்தர்வ தம்பதிகளின் பாட்டைக் கேட்டுத் தான், அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சியாம்.

செய்த பாவத்தைத் (பிறப்பால் பிராமணன் ஆன ஹிரண்யனைக் கொன்றதால்) தொலைப்பதற்காக, யோகத்தில் ஆழ்ந்தவர் யோக நரசிம்மர். பாவ, புண்யம் என்றால் என்ன என்று தீர்மானம் செய்தவனே, தன் சொந்த வார்த்தைக்காகத் தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் விநோதக் காட்சி. ராமனாக வந்து, அருமை மனையாளைத் தொலைத்துத் தேடி அலைந்து வருத்திக் கொண்டவன் தானே!

யோகானந்த நரசிம்மர் விக்ரஹம், கொஞ்சம் பின்னப் பட்டு விட்ட படியால், ஜீயர் அவர்கள், புதிய விக்ரஹம் செய்து வைத்திருக்கிறார். அருளும், அழகும் கொஞ்சமும் குறையவில்லை. இந்த சன்னதிக்குப் பக்கத்திலேயே, ஒரு ஆஸ்ரமம் நடத்துபவரும், வேறொரு யோக நரசிம்மர் சன்னதி கட்டியிருப்பதாகச் சொன்னார்கள்.

ப்படியாகத் தானே, நரசிம்மனின் கருணையால், ஒன்பது பேர்களையும் ஒரே நாளில் தரிசித்து முடித்தோம். அந்த நாள், வாழ்வின் ஒரு அர்த்தமுள்ள நாளாக ஆகிப் போனது. பானகப் பிரியன், எங்களைத் தன்னகம் கூட்டி, அருள் தந்தான். அவனுக்கு நன்றி சொல்ல நினைப்பது கூட, அபத்தமாகிப் போகும். அவன் நினைத்தான் – நடத்திக் கொண்டான்.

மறு நாள் (26ந் தேதி – ஸ்வாதி நட்சத்திரம்) காலை (4.30 மணி), கீழ் அஹோபிலத்தில், திருப்பாவை ஸ்பெஷலில் கலந்து கொண்டு, பகவானை மனிதப் பிறவியாகவே அனுபவித்த ஆண்டாளிடம், அது எப்படி என்ற இரகசியத்தைக் கேட்க முயன்று, பின்னர், மேல் அஹோபிலத்தில் நரசிம்மனுக்கு அபிஷேகம் செய்து அனுபவித்து விட்டு, பெங்களூருக்குக் கிளம்பினோம்.

சில விஷயங்கள்:

  • ஒவ்வொரு நரசிம்மரையும், ஒவ்வொரு கிரகம் வந்து வழி பட்டதாம். உ.ம்: பாவன – புதன்; யோகானந்தா – சனி; சத்ரவத – கேது.
  • தெய்வாதீனமாக, நாங்கள் போன வேளையில், எல்லா சன்னிதிகளிலும் அர்ச்சகர்கள் இருந்தனர். கைடு வைத்துக் கொண்டால், அவர்கள், இந்த விஷயத்தைப் பார்த்துக் கொண்டு விடுவார்கள். அவசியம் என்றால், அர்ச்சகர்களை, வீட்டிற்குப் போயே, கூட்டி வந்து விடுவார்கள்.
  • நாங்கள் பெங்களூருக்கு வந்த பாதையும் நேரமும்:
    மதியம் 11.45க்குக் கிளம்பி, 414 கி.மீ கடந்து, இரவு 9.10க்கு வீடு வந்து சேர்ந்தோம். வழி: (எல்லா தூரமும் கீழ் அஹோபிலத்தில் இருந்து) அல்லகட்டா (28 கி.மீ., 12:20), கோவில்குண்ட்லா (53 கி.மீ., மதியம் 1 மணி), பங்கனபள்ளி (66 கி.மீ., 1.30 மணி), குத்தி (147 கி.மீ., 2.55 மணி முதல் 3.20 மணி வரை), அனந்த்பூர் (198 கி.மீ., 4.10 மணி), பெனுகொண்டா (269 கி.மீ., 5.30 மணி), சிக்கபலபூர் (இரவு 7 மணி முதல் 7.30 வரை).
  • பொறுமை இருந்தால், நாங்கள் எடுத்த போஃட்டோக்களைக் கீழ்க்கண்ட ‘இன்டர்நெட் சைட்’டில் பார்க்கலாம்:

    http://pg.photos.yahoo.com/ph/sunsesh/album?.dir=/d62a&.src=ph&.tok=ph7bRMEBwBkeswIN (பொதுவாக உருப்படியானவை)

    http://pg.photos.yahoo.com/ph/sunsesh/album?.dir=/56e0&.src=ph&.tok=phLdRMEBQOEvq8In (அநேகமாக பொறுமையைச் சோதித்து விடும்).



ஸர்வம் கிருஷ்ணணுக்கு அர்ப்பணம்.

Tuesday, January 17, 2006

பஸ் பயணமும் அல்ப ஸங்க்யையும்

எனக்கு பஸ் பயணம் என்றாலே கொஞ்சம் பிரச்னை தான். அகத்தியர், விபீஷணன், இராவணனுக்குக் கூட, இதே பிரச்னை தான் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அல்ப விஷயம் தான்: அல்ப ஸ்ங்க்யை தான். நானும் என்னென்னவோ செய்து பார்த்து விட்டேன்: கிளம்புவதற்கு 3 மணி முன்ன்தாக இருந்து, ஸ்டிரிக்டாக, திரவ பதார்த்தங்களுக்கு, நோ, நோ! எனக்கு நானே ஸெல்ஃப் ஹிப்நாடைஸ் பண்ணிக் கொள்வேன்: “உன்னால் முடியும் தம்பி! எல்லாம், உன் மனதில் தான் இருக்கிறது!” ம்ஹும், பிரயோஜனமே, கிடையாது! (அப்புறம் தான் தெரிந்தது, ‘அது’ மனதில் இல்லை – வேறெங்கோ இருந்தது.)

முன்பெல்லாம், பஸ் பயணம் என்றால், நிறைய, ஒரு ரூபாய் நாணயங்களைத் தேடி எடுத்துக் கொள்வேன். ஆனால், இப்போதெல்லாம், நிறைய இடங்களில், இலவசமாக்கி விட்டார்கள். ‘இரண்டு’க்குத் தான் மதிப்பாம்; ‘ஒன்’றைப் பற்றி, லட்சியம் செய்வதில்லை. சில சமயங்களில், எங்கேயோ வசதியே இல்லாத இடத்தில், பஸ்ஸை நிறுத்துவார்கள்; ஒரு சின்னப் பையன், பஸ்ஸில் ஏறி வந்து, குரல் கொடுப்பான்: (ஆமாம், சைல்ட் லேபர் பிரச்னை கிடையாதோ?) “சார், பஸ் ஒரு பத்து நிமிஷம் நிற்கும்; காபி, டி சாப்பிடறவங்கள் எல்லாம், இறங்கி சாப்பிடலாம்!”. நிறையப் பேர் கண்டிப்பாக, இறங்குவோம். ஆனால், பாதிப் பேர்தான், உள் நோக்கிச் செல்லும் திரவத்திற்காக. மீதிப் பேருக்கு, திரவத்தின் திசையே வேறு. வயல் வெளி, மரமடி என்று இருந்தால், ஓ.கே. இல்லையென்றால், சுவரோரம் தான்; வீட்டுச் சுவரோ, அலுவலகச் சுவரோ, கவலை கிடையாது. ஒரு மனிதனின், நாணயம், இந்த மாதிரிப் பயணங்களில் அவன் எங்கே ‘போகிறா’ன் என்பதைப் பொறுத்துத் தீர்மானிக்கலாம் என்று நான் நினைப்பதுண்டு.

சமீபத்தில், வேறு வழியில்லாமல், ராஜபாளையம், பஸ்ஸில் போகும் படி ஆகி விட்டது. வழியில், “சார், பஸ் ஒரு பத்து நிமிஷம் .....’ சப்தம் கேட்டு, திடும்மென தூக்கம் கலைந்து, தேவை இருக்கிறதா, இல்லையா என்று கூட நினைத்துப் பார்க்காமல், மளமளவென்று இறங்கிப் போய்ப் பார்த்தால், முதுகுகளுக்குப் பின்னால் தெரிந்த சுவற்றிற்குப் பின்னால் – ஆ...ஹா.....ஒரு பள்ளிக்கூடம் அல்லவா தெரிகிறது. பொங்கி வரும் காவேரிக்கு அணை போட்டது போல் ஆகி விட்டது. வருத்தததுடன், வேறு ஏதாவது இடம் இருக்கிறதா என்று பார்த்த போது, சுவற்றில், சில திருக்குறள் எழுதியிருந்தது தெரிந்தது. முதுகுகளைத் தாண்டிப் பார்க்கையில், தெரிந்த குறள்:

துப்பார்க்குத் துப்பாக்கி துப்பாய துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

Monday, January 09, 2006

வழியும் குறுக்கு வழியும்

(ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியா Dec 2005 இதழில் இருந்து)

ஸ்ரீமத் பாகவதத்தில் ஸப்தம ஸ்கந்தத்தில் ஹிரண்யகசிபு பிரஹ்லாதனைப் பார்த்து, நீ அறிந்தவற்றுள் சிறந்தது எது எனக் கேட்கிறான். அதற்கு பிரஹ்லாதன் ஸ்ரீமந் நாராயணனே ஸர்வாந்தர்யாமி என்றும், அவனை அடையும் ஒன்பது வழிகளைக் கூறுகிறான்:

ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவேதனம்



  1. பகவன் நாமா / புகழ் இவைகளைக் கேட்பது (உ.ம்: பரீக்ஷித் மஹாராஜா)
  2. பகவன் நாமாவை / கதைகளைச் சொல்வது (உ.ம்: சுகப்ரம்ம மஹர்ஷி)
  3. பகவானையே எப்போதும் நினைப்பது (உ.ம்: ப்ரஹ்லாதன்)
  4. பகவானை எப்போதும் புஷ்பத்தால் அர்ச்சிப்பது (உ.ம்: ப்ருது சக்ரவர்த்தி)
  5. பகவானின் திருவடிகளில் சேவகம் செய்வது (உ.ம்: தாயார் மஹாலக்ஷ்மி)
  6. பகவானை அடிக்கடி விழுந்து சேவிப்பது (உ.ம்: அக்ரூரர்)
  7. பகவானுக்குத் தாஸனாயிருத்தல் (உ.ம்: கருடன் / ஹனுமார்)
  8. பகவானுடைய தோழனாக இருத்தல் (உ.ம்: அர்ஜுனன்)
  9. ஸகலத்தையும் அவனுக்காக அர்ப்பணித்தல் (உ.ம்: மஹாபலி)

******
ஸ்வாமி வேதாந்த தேசிகன் பகவானை நினைக்க ஒரு எளிய வழி சொல்லித் தருகிறார்:


  • காலையில் எழுந்த உடன்: ஹரி என்று சொல்லவும்
  • உணவு உண்ணும் போது: கோவிந்தன் நாமம்
  • வெளியே செல்லும் போது: கேசவன்
  • படுக்கும் போது: மாதவன்

Monday, July 11, 2005

நான் பட்ட கடன்

ஓர் வாழைப் பழக்காரரிடம் நாங்கள் நேற்று ரூ 15 கடன் பட்டு விட்டோம். சங்கடமாக இருக்கிறது.

பழம் வாங்கிக் கொண்டிருக்கும் போது, திடீர் என்று மழை வந்து விட, நாங்கள் அவசரமாக ஒதுங்க வேண்டி வந்தது (அது ஒன்றும் ஸ்கூல் இல்லையென்றாலும்). கடைசியில் என்னவோ, ஒரு நிமிஷம் கூடப் பெய்யவில்லை – உடனே, நின்று விட்டது. வெளியே வந்து பார்த்தால்,

பழங்களைக் காணோம்!

பழ வண்டியைக் காணோம்!

பழக் காரரையும் காணோம்!

எப்படி மாயமாக மறைந்து போயிருக்கக் கூடும்? ஒரு வேளை, நாரதர் எங்களுக்காக, ‘ஸ்பெஷ’லாக அனுப்பிய, ஞானப் பழங்களாக இருக்குமோ? (போய் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்!) ஏதாவது போன ஜன்மக் கடனாக இருக்குமோ? (அதாவது, பழக் காரருக்கு) ஆமாம், நாங்கள் பணம் தரவில்லை யென்பது, அவருக்குத் தெரியுமா?

விடை கிடைக்காத கேள்விகள்.

இப்போதைக்கு, அந்தப் பணத்தை ஏதாவது கோயில் உண்டியலில் போடுவது தான், எங்களுக்குத் தெரிந்த வழி. (கூடவே, அவர் இந்துவாக இருக்க வேண்டுமே என்ற பிரார்த்தனையுடன். இல்லா விட்டால், மசூதி, சர்ச் என்று தேட வேண்டுமே!)

Monday, May 16, 2005

குமுடன் அல்லது விகதம்

வர வர, குமுதம், விகடன் இரண்டிலும், ஒரே விஷயங்கள் வருவது, அதிகரித்துக் கொண்டே போகிறது. காதல் சந்தியா பற்றி இரண்டிலும் ஓரே வாரத்தில் வந்தது. அப்புறம், சிம்பு பற்றி. அதற்குப் பிறகு, இந்த வாரம், மத்திய அமைச்சர் அன்புமணி.

யார் நம்பர் 1 என்று போட்டி நடந்தது. (ஆமாம், இரண்டுக்கும் இடையில், ‘பெஸ்ட் கண்ணா, பெஸ்ட்’ குங்குமம் என்ன ஆச்சு?). விகடன், இவ்வளவு, ‘அக்ரெஸி’வாக இருந்து, பார்த்த ஞாபகமே இல்லை. ஆமாம், நாம் எப்படி உண்மையைத் தெரிந்து கொள்வது? யாராவது உங்களுக்குத் தெரிந்து, ABC ‘ஆஃபீ’ஸில் வேலை பார்க்கிறார்களா? ஆம் என்றால் கேட்டுச் சொல்லவும். இப்படித்தான், டெல்லியில், ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ வும், ‘ஹிந்துஸ்தான் டைம்’ஸும், கோர்ட்டுக்கே போனதாக, ஞாபகம்.

ரொம்ப நாள் முன்னாடி, மணியனும், சாவியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். சாவியிடம், என்க்கு ஒரு நன்றியுணர்வு உண்டு: என்னுடைய முதல் சிறுகதை, ‘உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சு’, அவருடைய ‘தினமணி கதி’ரில் தான் வெளியானது.

Thursday, May 05, 2005

லக்க லக்க லக்க

ந்திரமுகி படம் பார்த்தோம். ஒரிஜினல் தலைவரின் படம் – அதாவது ஒரிஜினல் ஒரிஜினல் தலைவரைச் சேர்க்காமல். (வேற யாரு, நம்ம எம்.ஜி.ஆர். தான்.) ஆமாம் – இப்போது, தலை யாரு? (என் 9 வயசுப் பையன் பத்ரியைக் கேட்டால், விஜய் தான் என்கிறான். அவனை வெறுப்பேற்ற, நான் அஜீத் பேரைச் சொல்வது வழக்கம்).

Back to Chandramukhi.

நன்றாக, ‘சஸ்பென்’ஸைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால், சில படங்களில், யாராவது, flash back சொல்லும் போது, அவர்கள் இல்லாத இடங்களில் நடப்பதைக் கூட சொல்வது மாதிரி, கடைசியில் குற்றவாளி முன்னால் தெரியும் போதே, பின்னால் நடக்கும் அமாநுஷ்ய விஷயங்களுக்கு எல்லாம் ஏதும் விளக்கம் கிடைக்கவில்லை.

படம் பார்க்கும் போது, பயங்காட்ட வேண்டிய விஷயங்கள் சிரிப்பு மூட்டினாலும் (பத்ரிக்குக் கூட!), ராத்திரி தனியாக பாத்ரூம் போகும் போது, அந்த ‘முழி’ கொஞ்சம் பயம் மூட்டியது, உண்மை.

தலைவர் சண்டையின் போது, வாயில் என்ன, பபுள் கம்மா? அடக் கடவுளே!

மொத்தத்தில், ஓ.கே. ஆனால், வயதானதாலோ (எனக்கு) என்னவோ, ரஜினியின் ‘ஆயிரம் ஜன்மங்கள்’ ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது. (இதே போல் தான், சி.சுந்தரின் படம் ஒன்று, லவ்லியா?, பார்க்கையில் பழைய படம், ‘பெண்ணே நீ வாழ்க’ தான் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.)

பி.கு.: தலைப்புக்கும் படத்திற்கும், என்ன சம்பந்தம் என்று கேட்டால், ரொம்ப சந்தோஷப் படுவேன் – ஏனென்றால், அப்படிக் கேட்டால், நீங்கள், தமிழில், என் ‘ப்ளாக்’ தவிர, வேறெதுவும் படிப்பதில்லை என்று அர்த்தம்! எழுதுபவனுக்கு, வேறென்ன வேண்டும்?

Wednesday, May 04, 2005

Blogspotக்கு ஒரு ஓ (அல்லது) ஜே!



ரு சின்ன ஆசை – தமிழில் ப்ளாகலாமே என்று. ஆசை வந்ததன் காரணம், ஒரு புண்ணியவானின் ‘ஹோம் பேஜ்’ தமிழில் பார்த்தேன். (நிஜமாகவே நல்ல அர்த்தத்தில் தான் அவரைப் புண்ணியவான் என்றேன். கோபித்துக் கொள்ள வேண்டாம்.) அவரே யூனிகோட் (அல்லது கோடு) பற்றியும் எழுதியிருந்தார். சரி என்று உடனே Tamil Input Editorஐ ‘டவுன் லோட்’ (அல்லது லோடு) செய்து விட்டேன். ரொம்ப நாள் முன்னாடி, முரசு எடிட்டர் முயற்சி (மு னாவுக்கு மு னா – பரவாயில்லையே!) செய்திருக்கிறேன். ஆனால் தொடரவில்லை. இப்போது பார்க்கலாம்.

Tamil Transliteration Keyboard தான் சௌகரியமாக இருக்கிறது. ஆனால் அங்கங்கே தடங்கலுக்கு வருந்துகிறோம் மாதிரி கொஞ்சம் கொஞ்சம் கஷ்டம் வந்தன. உ.ம்: ‘ன’ எங்கே போச்சு? அப்புறம், புள்ளி வச்ச எழுத்து, ஒரு வார்த்தையோட கடைசியில் வந்தால், அடுத்து எதைத் தட்டினாலும், புள்ளி கோபித்துக் கொண்டு, ஒடிப் போய் விட்டது. (என்ன பண்ண வேண்டும் என்று எப்படியோ கண்டு பிடித்தேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்).

அப்புறம், வேகப் பிரச்னை! – ஆனால், தொடர்ந்து செய்தால், வேகம் வரும் என்று நம்புகிறேன்.

இந்த ‘சைட்’ (அல்லது சைட்டு) நடத்தும் புண்ணியவான்களுக்கு, ஒரு ‘ஒ’ போட்டு விட்டு, வாங்க, ஆரம்பிக்கலாம், நம்ப கிறுக்கலை, I mean, கலக்கலை!

Keywords: Blog Sundararajan Seshadri