Monday, May 16, 2005

குமுடன் அல்லது விகதம்

வர வர, குமுதம், விகடன் இரண்டிலும், ஒரே விஷயங்கள் வருவது, அதிகரித்துக் கொண்டே போகிறது. காதல் சந்தியா பற்றி இரண்டிலும் ஓரே வாரத்தில் வந்தது. அப்புறம், சிம்பு பற்றி. அதற்குப் பிறகு, இந்த வாரம், மத்திய அமைச்சர் அன்புமணி.

யார் நம்பர் 1 என்று போட்டி நடந்தது. (ஆமாம், இரண்டுக்கும் இடையில், ‘பெஸ்ட் கண்ணா, பெஸ்ட்’ குங்குமம் என்ன ஆச்சு?). விகடன், இவ்வளவு, ‘அக்ரெஸி’வாக இருந்து, பார்த்த ஞாபகமே இல்லை. ஆமாம், நாம் எப்படி உண்மையைத் தெரிந்து கொள்வது? யாராவது உங்களுக்குத் தெரிந்து, ABC ‘ஆஃபீ’ஸில் வேலை பார்க்கிறார்களா? ஆம் என்றால் கேட்டுச் சொல்லவும். இப்படித்தான், டெல்லியில், ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ வும், ‘ஹிந்துஸ்தான் டைம்’ஸும், கோர்ட்டுக்கே போனதாக, ஞாபகம்.

ரொம்ப நாள் முன்னாடி, மணியனும், சாவியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். சாவியிடம், என்க்கு ஒரு நன்றியுணர்வு உண்டு: என்னுடைய முதல் சிறுகதை, ‘உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சு’, அவருடைய ‘தினமணி கதி’ரில் தான் வெளியானது.

Thursday, May 05, 2005

லக்க லக்க லக்க

ந்திரமுகி படம் பார்த்தோம். ஒரிஜினல் தலைவரின் படம் – அதாவது ஒரிஜினல் ஒரிஜினல் தலைவரைச் சேர்க்காமல். (வேற யாரு, நம்ம எம்.ஜி.ஆர். தான்.) ஆமாம் – இப்போது, தலை யாரு? (என் 9 வயசுப் பையன் பத்ரியைக் கேட்டால், விஜய் தான் என்கிறான். அவனை வெறுப்பேற்ற, நான் அஜீத் பேரைச் சொல்வது வழக்கம்).

Back to Chandramukhi.

நன்றாக, ‘சஸ்பென்’ஸைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால், சில படங்களில், யாராவது, flash back சொல்லும் போது, அவர்கள் இல்லாத இடங்களில் நடப்பதைக் கூட சொல்வது மாதிரி, கடைசியில் குற்றவாளி முன்னால் தெரியும் போதே, பின்னால் நடக்கும் அமாநுஷ்ய விஷயங்களுக்கு எல்லாம் ஏதும் விளக்கம் கிடைக்கவில்லை.

படம் பார்க்கும் போது, பயங்காட்ட வேண்டிய விஷயங்கள் சிரிப்பு மூட்டினாலும் (பத்ரிக்குக் கூட!), ராத்திரி தனியாக பாத்ரூம் போகும் போது, அந்த ‘முழி’ கொஞ்சம் பயம் மூட்டியது, உண்மை.

தலைவர் சண்டையின் போது, வாயில் என்ன, பபுள் கம்மா? அடக் கடவுளே!

மொத்தத்தில், ஓ.கே. ஆனால், வயதானதாலோ (எனக்கு) என்னவோ, ரஜினியின் ‘ஆயிரம் ஜன்மங்கள்’ ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது. (இதே போல் தான், சி.சுந்தரின் படம் ஒன்று, லவ்லியா?, பார்க்கையில் பழைய படம், ‘பெண்ணே நீ வாழ்க’ தான் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.)

பி.கு.: தலைப்புக்கும் படத்திற்கும், என்ன சம்பந்தம் என்று கேட்டால், ரொம்ப சந்தோஷப் படுவேன் – ஏனென்றால், அப்படிக் கேட்டால், நீங்கள், தமிழில், என் ‘ப்ளாக்’ தவிர, வேறெதுவும் படிப்பதில்லை என்று அர்த்தம்! எழுதுபவனுக்கு, வேறென்ன வேண்டும்?

Wednesday, May 04, 2005

Blogspotக்கு ஒரு ஓ (அல்லது) ஜே!



ரு சின்ன ஆசை – தமிழில் ப்ளாகலாமே என்று. ஆசை வந்ததன் காரணம், ஒரு புண்ணியவானின் ‘ஹோம் பேஜ்’ தமிழில் பார்த்தேன். (நிஜமாகவே நல்ல அர்த்தத்தில் தான் அவரைப் புண்ணியவான் என்றேன். கோபித்துக் கொள்ள வேண்டாம்.) அவரே யூனிகோட் (அல்லது கோடு) பற்றியும் எழுதியிருந்தார். சரி என்று உடனே Tamil Input Editorஐ ‘டவுன் லோட்’ (அல்லது லோடு) செய்து விட்டேன். ரொம்ப நாள் முன்னாடி, முரசு எடிட்டர் முயற்சி (மு னாவுக்கு மு னா – பரவாயில்லையே!) செய்திருக்கிறேன். ஆனால் தொடரவில்லை. இப்போது பார்க்கலாம்.

Tamil Transliteration Keyboard தான் சௌகரியமாக இருக்கிறது. ஆனால் அங்கங்கே தடங்கலுக்கு வருந்துகிறோம் மாதிரி கொஞ்சம் கொஞ்சம் கஷ்டம் வந்தன. உ.ம்: ‘ன’ எங்கே போச்சு? அப்புறம், புள்ளி வச்ச எழுத்து, ஒரு வார்த்தையோட கடைசியில் வந்தால், அடுத்து எதைத் தட்டினாலும், புள்ளி கோபித்துக் கொண்டு, ஒடிப் போய் விட்டது. (என்ன பண்ண வேண்டும் என்று எப்படியோ கண்டு பிடித்தேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்).

அப்புறம், வேகப் பிரச்னை! – ஆனால், தொடர்ந்து செய்தால், வேகம் வரும் என்று நம்புகிறேன்.

இந்த ‘சைட்’ (அல்லது சைட்டு) நடத்தும் புண்ணியவான்களுக்கு, ஒரு ‘ஒ’ போட்டு விட்டு, வாங்க, ஆரம்பிக்கலாம், நம்ப கிறுக்கலை, I mean, கலக்கலை!

Keywords: Blog Sundararajan Seshadri